குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்
Aug 02, 2025
BIG STORIES
திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!
Aug 02, 2025 04:59 PM
15
பணக்கார கடவுளாக இந்துக்களால் போற்றப்படுகிறவர், திருப்பதி ஏழுமலையான். திருப்பதிக்கு சென்றால் திருப்பம் வரும்; ஏற்றம் வரும் என்பது நம்பிக்கை. இதையெல்லாம் தாண்டி, திருப்பதிக்கு சென்றால் ‘லட்டு வாங்கிட்டு வந்தீங்களா?’ என மிகுந்த எதிர்பார்ப்போடு பலரும் கேட்கும் அளவுக்கு பிரசித்து பெற்றது. அதுவும், திருப்பதி லட்டு என்பது வெறும் பிரசாதம் மட்டுமல்ல. அது மில்லியன் கணக்கான பக்தர்களுக்கு ஓர் உணர்வு எனவும் மெய்ச்சிலிர்க்கவைக்கும் அளவுக்கு சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட, திருப்பதி லட்டுவுக்கு ஆகஸ்ட்-2 ஆம் தேதி 310 வயதாகிறது, என கூறப்படுகிறது. இப்படி, 310 வயது திருப்பதி லட்டுவின் சுவை மிகுந்த சுவாரஸ்ய பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
1715 ஆண்டு ஆகஸ்ட்-2 ஆம் தேதியிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு லட்டு படைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 1803 ஆம் ஆண்டு முதல், இந்த லட்டுவானது பக்தர்களுக்கு பூந்தி வடிவில் வழங்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அன்று, எட்டு அணாவுக்கு விற்கப்பட ஆரம்பித்த ஒரு லட்டு, இன்று 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லட்டுவின் அளவு குறைந்தாலும் அதன் சுவையும் மணமும் மாறவில்லை என பக்தர்களால் சிலாகிக்கப்படுகிறது. உலக புகழ்பெற்ற ஸ்ரீவாரி லட்டுவின் சுவை என்பது வெறும் இனிப்பு மட்டுமல்ல, மூன்று நூற்றாண்டுகளை கடந்த வரலாறு, பக்தி மற்றும் பாரம்பர்யத்தின் கலவை எனவும் மெய்ச்சிலிர்க்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் என அழைக்கப்படும் திருப்பதி வெங்கடேச சுவாமி கோயிலில் உள்ள பெருமாளை, தரிசித்துவிட்டு சில நாட்கள் மலையிலேயே தங்கி, பிறகு ஊருக்கு திரும்புவது பக்தர்களின் வழக்கமாக இருந்தது. அப்போது, வீடுகளுக்கு செல்லும்வரை பசியைப் போக்க கோயில்களில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்படி, கொடுக்கப்பட்ட பிரசாதம் ‘திருப்பொங்கல்’ என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது.
காலப்போக்கில், திருப்பதி ஏழுமலையானுக்கு படைக்கப்படும் உணவுப்பொருட்களின் எண்ணிக்கை அதிகமானதாக கூறப்படுகிறது. அதிரசம், அப்பம், வடை, மனோகரம், பொடி என உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த பிரசாதங்கள் வெகுநாட்கள் தாங்காது. ஆகவே, நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் பிரசாதத்தை தேட ஆரம்பித்துதான், 1803 ஆண்டு முதல், லட்டு பிடிப்பதற்கு முன் பூந்தி இனிப்பானது பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருப்பதி லட்டை ஒரு முக்கியமான பிரசாதமாக மாற்றிய பெருமை கல்யாணம் அய்யங்கார் என அழைக்கப்பட்ட, ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி சீனிவாச ராகவன் என்பவரையே சாரும் எனவும் கிரெடிட் கொடுக்கப்படுகிறது.
இவர்தான் திருப்பதி தேவஸ்தானத்திற்கு என்றே பிரத்தியேகமான ருசி கொண்ட லட்டுவை தயாரித்தார் என்றும் பின்னாளில் இவரது மகன், சகோதரர்கள் என பாரம்பரியமாக அவரது குடும்பமே இந்த லட்டு தயாரிப்பில் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.
அதாவது, ஒரு பெரிய செல்வந்தர் தன் வேண்டுதல் நிறைவேறினால், பெருமாளின் திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்களுக்கு பிரமாண்டமான லட்டை பிரசாதமாக வழங்குவதாக வேண்டிக்கொண்டாராம். அவருடைய வேண்டுதல் நிறைவேறியதும், அவர் வேண்டிக்கொண்டப்படி லட்டு தயாரிக்கப்பட்டதாம். அப்படி அவருடைய வேண்டுதல் நிறைவேறியதை எடுத்து கல்யாணம் ஐயங்கார் அவற்றை தயாரித்து வழங்கியதாக சொல்லப்படுகிறது. அப்படித்தான், லட்டு ஒரு முக்கிய பிரசாதமாக மாறியது என கூறப்படுகிறது.
பக்தர்கள் லட்டுவை வாங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விநியோகிப்பது வழக்கமாகிவிட்டது. பல ஆண்டுகளாக, உலகில் அதன் அங்கீகாரம் உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், GI எனப்படும் புவிசார் குறியீடு அந்தஸ்தைப் பெற்றது. வேறு எந்த நிறுவனமும் அதே பெயரில் லட்டுகளை விற்க முடியாது என்பதை உறுதிசெய்து, அதன் தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்கிறது என கூறப்படுகிறது.
ஆஸ்தானம் லட்டு, கல்யாண உட்ஸ்வம் லட்டு, ப்ரோகதம் லட்டு என மூன்று வகை லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில், ஆஸ்தானம் லட்டு என்பது சிறப்பு பண்டிகை நாட்களில் தயாரிக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. பிரதமர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், பிற நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆகியோருக்கு இந்த ஆஸ்தானம் லட்டு வழங்கப்படுகிறது. இது பொதுவாக 750 கிராம் எடை கொண்டதாக இருக்கும். கல்யாண உட்ஸ்வம் லட்டு என்பது கல்யாண உட்ஸ்வ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ப்ரோகதம் லட்டு என்பது அன்றாடம் கோயிலுக்கு வரும் வழக்கமான பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
"ஒவ்வொரு 5,100 லட்டுகளுக்கும், நாங்கள் 165 கிலோ பசு நெய், 180 கிலோ வங்காள பருப்பு மாவு, 400 கிலோ சர்க்கரை, 30 கிலோ முந்திரி, 18 கிலோ திராட்சை, எட்டு கிலோ ஏலக்காய் மற்றும் நான்கு கிலோ பாறை சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். லட்டுவின் பாரம்பரிய சுவையைப் பராமரிக்க ஒவ்வொரு மூலப்பொருளும் துல்லியமாக அளவிடப்படுகிறது," என்று லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள TTD எனப்படும் திருப்பதி தேவாஸ்தானம் தரப்பில் கூறப்படுகிறது.
லட்டு தயாரிக்க தினமும் சுமார் 15 மெட்ரிக் டன் நெய் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் விற்பனை ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் எனவும் கூறப்படுகிறது.
175 கிராம் சரியான எடையை உறுதி செய்வதற்காக லட்டுகள் அதிநவீன ஆய்வகத்தில் சோதிக்கப்படுகின்றன. நெய், முந்திரி, சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றின் அளவு சரியாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது" என ஆந்திர அரசால் நிர்வகிக்கப்படும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu