BIG STORIES
கல்லூரி மாணவர் காதலுக்கு பலியானாரா..? சிபிசிஐடி பதிலுக்கு வெயிட்டிங்..!
Aug 12, 2025 01:39 AM
206
கல்லூரி மாணவர் காதலுக்கு பலியானாரா..? சிபிசிஐடி பதிலுக்கு வெயிட்டிங்..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விபத்தில் பலியானதாக கூறப்பட்ட கல்லூரி மாணவரை, அவரது காதலியின் உறவினர்கள் கொலை செய்திருப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள அரசகுழி கிராமத்தைச் சேர்ந்த எம்.முருகன் என்பவரது மகன் ஜெயசூர்யா(19) விருத்தாசலத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவரை அவர் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இருவரும் வேறு வேறு சாதி என்பதால் இந்த காதலுக்கு அந்த பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணின் அக்காள் கணவர், மாணவர் ஜெய சூர்யாவை பிடித்துச் சென்று காதலை கைவிடவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறபடுகின்றது.
இந்த நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் அந்த பெண்ணின் உறவினரான பிரவீன் என்பவரும் ஜீவன் என்ற மற்றொரு மாணவனும் கடந்த மே 18-ந்தேதி மோட்டார் சைக்கிளில் ஜெயசூர்யாவை அழைத்து சென்றுள்ளனர். நீண்ட நேரமாக ஜெய சூர்யா வீட்டிற்கு திரும்பவில்லை. இரவு 10 மணிக்கு போன் செய்து விசாரித்த போது பிரவீண், ஜீவன் ஆகியோருடன் இருப்பதாக ஜெய்சூர்யா கூறி உள்ளார்.
அதிகாலை வரை வீடு திரும்பாத நிலையில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற போது மின்கம்பத்தில் மோதியதில் ஜெயசூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார். கல்லூரி பேராசிரியரான பரமசிவம் என்பவர்தான் விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்ததாக குள்ளஞ்சாவடி போலீசார் ஜெயசூர்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்துக்கும், பேராசிரியர பரமசிவம் வீட்டுக்கும் 20 கிலோ மீட்டர் தூரம் என்ற நிலையில் விபத்து நடந்த இடத்துக்கு, அந்த இரவில் அவர் எப்படி வந்தார்? அவரை அழைத்தது யார் ? ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு ஏற்றி விட்டவர் ஏன் இந்த விபத்து குறித்து உடனடியாக ஏன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை ? என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் உள்ளது என்று பெற்றோர் தெரிவித்தனர். மேலும் ஜெயசூர்யாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் உறவினர்களால் நடத்தப்பட்ட ஆணவக் கொலை தான் இது என்றும் குற்றஞ்சாட்டினர்.
எனவே, இந்த வழக்கை வேறு ஒரு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் முருகன் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு கடந்த நான்காம் தேதி விசாரணைக்கு வந்த போது நீதிபதி பி.வேல்முருகன், தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. துரதிஷ்டவசமாக இந்த ஆணவக் கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்று கருத்து தெரிவித்தார். பின்னர், ஜெயசூர்யா மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம் செய்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் 2 வாரத்துக்குள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம், குள்ளஞ்சாவடி போலீசார் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கடலூர் வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணனை ஜெயசூர்யாவின் பெற்றோர் நேரில் சந்தித்தனர். இதில் காவல் காவல்துறையினரும் உண்மையை மறைப்பதாகவும் , உரிய விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டபடி சிபிசிஐடி விசாரணையில் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் இதற்கு அனைவரும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கதறி அழுது கேட்டுக்கொண்டனர்.
சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் இந்த விபத்து வழக்கு , கொலை வழக்காக மாறுமா ? ஜெயசூர்யாவின் மரணத்தில் உள்ள சந்தேக கேள்விகளுக்கு விடை கிடைக்குமா ? என்பதே அவரது உறவினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu